தமிழகத்தில் கள் இறக்கும் போராட்டம் நடந்தே தீரும் : கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உறுதி…!

Author: kavin kumar
18 January 2022, 7:52 pm
Quick Share

திருப்பூர்: தமிழகத்தில் வரும் 21ம் தேதி சமூக இடைவெளியுடன் கள் இறக்கி சந்தைப் படுத்தும் போராட்டம் நடந்தே தீரும் என்று கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- கள் உணவு பொருள். போதைப்பொருள் அல்ல. கள் தடை செய்யப்பட வேண்டியதும் அல்ல. பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை உள்பட பல நாடுகளில் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர். எனவே தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி, கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி முதல் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்தை அறிவித்துள்ளோம்.

ஆதரவு எங்கள் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் நாங்கள் நடத்துகின்ற போராட்டத்திலும் அவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கிடையில் கள் இறக்கும் நோக்கத்துடன் மரத்தில் ஏறினால், அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் வந்துள்ளதாக அறிந்தோம். போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் அறிவித்த தேதியில் திட்டமிட்டபடி கள் இறக்கி விற்கும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 341

0

0