எஸ்.வி. சேகர் வருத்தத்தை ஏற்றது போலீஸ் : தேசிய கொடி அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு..!

9 September 2020, 1:15 pm
Quick Share

எம்ஜிஆர் சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்ட் 15ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றுகிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து, தேசிய கொடியை அவமதித்தாக ஸ்.வி.சேகர் மீது, ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து, நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, எஸ்.வி சேகர் தரப்பில் தேசிய கொடியை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்தபோது, தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி.சேகர் உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் மன்னிப்பு கோரினால் முன்ஜாமீன் வழங்கலாம் எனவும், இல்லையென்றால் வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை எனவும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி எஸ்.வி சேகர் கடந்த 3ஆம் தேதி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “தேசிய கொடியை அவமதிக்கும் படி நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இனி என் வாழ்நாளில் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன்” என கேட்டுக்கொண்டிருந்தார். இதனையடுத்து எஸ்.வி சேகர் மீது தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை இன்று தகவல் அளித்துள்ளது. அதில், எஸ்.வி சேகர் வருத்தம் கோரிய மனுவை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

Views: - 0

0

0