குமரியில் தொடர் கனமழை: 100 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சக்கர தீர்த்த குளம்…பக்தர்கள் மகிழ்ச்சி..!!
Author: Aarthi Sivakumar7 November 2021, 9:48 am
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையினால் 100 ஆண்டுகளுக்கு பிறகு சக்கர தீர்த்த குளம் நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் சமேத காசிவிசாலாட்சி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவில் 1000 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும்.
இந்த கோவிலில் உள்ள கிணற்றில் இருந்துதான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடக்கும் வைகாசி விசாக திருவிழா மற்றும் நவராத்திரி திருவிழாவின் 10 நாட்களும் அம்மனின் அபிஷேகத்துக்கான புனிதநீர் வெள்ளிக்குடத்தில் எடுத்து யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் முன்பு சக்கர தீர்த்த குளம் உள்ளது.
இந்தக் குளத்துக்கு தண்ணீர் வரும் அடிமடை மணல் குவிந்து தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் இந்த குளம் பராமரிப்பின்றி பாழடைந்து தூர்ந்து போய் தண்ணீரின்றி வறண்டு கிடந்தது. இதைத்தொடர்ந்து புதர் மண்டிக் கிடந்த இந்த சக்கர தீர்த்த குளத்தை சமீபத்தில் சிவ தொண்டர்கள் மற்றும் சிவனடியார்கள் தூர்வாரி பராமரித்து உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் இந்த சர்க்கர தீர்த்தக் குளம் 100 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதைப் பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தண்ணீர் நிரம்பிய இந்த சக்கர தீர்த்த குளத்தில் சமீபத்தில் நடந்த ஐப்பசி அன்னாபிஷேகத்தை யொட்டி விசேஷ பூஜைகள் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
0
0