கெட்டுப்போன பால்கோவா.. வெஜ் ரோலில் ஆணி ; உறைந்து போன வாடிக்கையாளர்.. உடனே பறந்து வந்த அதிகாரிகள்..!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 1:52 pm
Quick Share

கெட்டுப்போன பால்கோவா, வெஜ் ரோலில் கிடந்த ஆணி கிடந்த நிலையில், சேலத்தில் செயல்பட்டு வந்த சென்னை கேக்ஸ் பேக்கரி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் 8 இடங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது கோயா என்பவர் சென்னை கேக் என்ற பெயரில் பேக்கரி வைத்து நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சேலம் மாநகர் நெத்திமேடு பகுதியில் இயங்கி வரும் சென்னை கேக்ஸ் பேக்கரி கடையில் சுரேஷ் என்ற வாடிக்கையாளர் ஒருவர் ஜிலேபி, மிக்சர் மற்றும் பால்கோவா உள்ளிட்ட தின்பண்டங்களை குழந்தைகளுக்காக வாங்கிச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த குழந்தைகள் அதனை ஆசையாக எடுத்து ருசித்துக் கொண்டிருந்தபோது, பால்கோவா முழுவதும் பூஞ்சான் பிடித்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன சுரேஷ் உடனடியாக மாவட்ட நியமன அலுவலருக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்னை கேக்ஸ் கடைக்கு சென்றார். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் தெரிவித்தனர்.

அப்போது அங்கு வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த பால்கோவாவை ஆய்வு செய்தபோது அது காலாவதியாகி இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைக்கு வந்த மற்றொரு வாடிக்கையாளரான தீபக் சரவணன் தான் வாங்கிச் சென்ற வெஜ் ரோலில் சுமார் 2 இன்ச் அளவில் துருப்பிடித்த ஆணி ஒன்று உள்ளதாக கடை ஊழியிடம் தெரிவித்தார். அதற்கு தயாரிப்பின் போது தவறு ஏற்பட்டிருக்கும் என அலட்சியமாக கூறியுள்ளார்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்ததால், அங்குள்ள உணவு பொருட்களை மாதிரி எடுத்துக்கொண்டு விளக்கம் கேட்டு கடிதமும் கொடுத்துச் சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காலாவதியான பால்கோவா உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

Views: - 530

0

0