நள்ளிரவில் தீ விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!!

4 September 2020, 3:32 pm
Salem Fire 5 Dead - Updatenews360
Quick Share

சேலம் : நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர் , ஐந்து ரோடு அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் குடியிருந்து வருபவர் அன்பழகன் (வயது50). இவருடைய சகோதரர் கார்த்தி(வயது 40). இவர்கள் மர அறுவை மில் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.

அன்பழகன் , அவருடைய மனைவி புஷ்பா(வயது 40), மகள் சௌமியா(வயது 17) மற்றும் அன்பழகனின் தந்தை சேட்டு, தாய் அமுதா ஆகியோரும் , தம்பி கார்த்தி அவருடைய மனைவி மகேஸ்வரி(வயது 35), கார்த்தி-யின் குழந்தைகள் சர்வேஷ்(வயது 12), முகேஷ்(வயது 10) என இரு குடும்பத்தினரும் பெற்றோருடன் நரசோதிபட்டி, ராமசாமி நகரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மாடியில் தாய்,தந்தையும், தரை தளத்தில் அன்பழகன் , கார்த்தி குடுத்பத்தினரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி அளவில் அன்பழகனின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திலிருந்தும் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள், இரு வாகனங்களுடன் உடனடியாக சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டிற்குள் சிக்கி இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். இந்நிலையில் வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த கார்த்திக் அவருடைய மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ், முகேஷ் மற்றும் அன்பழகனின் மனைவி புஷ்பா ஆகிய 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அன்பழகன் சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக மாடியில் உறங்கி கொண்டிருந்த அன்பழகனின் பெற்றோர் மற்றும் மகள் சௌமியா ஆகியோர் மாடிக்கு தீ பரவுவதற்குள் தீயணைப்புத் துறையினரால் காப்பாற்றப்பட்டனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0