குளத்தை தூர்வாருவதாக கூறி மணல் கடத்தல் : அதிகாரிகளுக்கு வந்த கோரிக்கை!!

Author: Udayachandran
8 October 2020, 5:25 pm
Sand Theft - Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே மருதுார் ஊராட்சியில் குட்டையை துார் எடுப்பதாக கூறி, மண் கடத்தும் செயல், ஓராண்டாக நடந்து வருவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை அடுத்த மருதுார் ஊராட்சியில், உப்பு பள்ளக் குட்டை உள்ளது. மழை காலத்தில், கட்டாஞ்சி மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர், பள்ளம் வழியாக குட்டைக்கு வந்து சேருகிறது. இதில் தேங்கி நிற்கும் தண்ணீரால், சுற்றுப் பகுதியில் உள்ள, ஏராளமான விவசாய கிணறுகளுக்கு நீரூற்றுக்காக பயன்படுத்துகின்றனர்.

கடந்தாண்டு, குளம் குட்டைகளை துார்வார, தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதன்பேரில், காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், இக்குட்டையை துார் எடுக்க, ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தனர். குட்டையை ஓரளவு துார் எடுத்து, கரையை உயர்த்தி, ஒரு லட்சம் ரூபாய்க்கு பணிகளை செய்து முடித்தனர்.

ஆனால் இந்த ஆர்டரை வைத்துக் கொண்டு, கடந்த ஒரு ஆண்டாக, அப்பகுதியில் உள்ள சில விவசாயிகள், உப்புப் பள்ள குட்டையை மேலும், 30 அடிக்கும் மேல், ஆழமாக குழி தோண்டியுள்ளனர். தோண்டிய மண்ணை, சிறிதளவு கரையில் கொட்டி உயர்த்தியுள்ளனர். மீதமுள்ள நூற்றுக்கணக்கான லோடு மண்ணை, லாரிகளில் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். சிலர் மண் கடத்தலை தொழிலாகவே செய்து வருகின்றனர்.

அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீரால், சுற்றுப் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு, நீர் ஊற்று கிடைக்கிறது. அதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து, குட்டையை ஆழம் செய்துள்ளோம். அரசு செய்யாத வேலையை, நாங்கள் செய்துள்ளோம்.இதிலிருந்த தோண்டிய மண்ணை கரையில் கொட்டியும், விவசாய நிலங்களிலும் குவித்து வைத்துள்ளோம்,’என்றனர்.

மண் கடத்தல் குறித்து, மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜனிடம் கேட்டபோது, ”மண் அள்ளும் நபர்களிடம், மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்ற பிறகே எடுக்க வேண்டும் என, பலமுறை கூறியுள்ளோம். ஆனால் அவர்கள், எங்களிடம் பி.டி.ஓ., வழங்கிய உத்தரவு உள்ளது எனக்கூறி தொடர்ந்து மண் அள்ளி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், குட்டையை ஆய்வு செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணியிடம் கேட்டபோது, ”குட்டையில் மண் எடுப்பவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இருந்தபோதும் மண் கடத்தல் நடப்பதாக தகவல் வருவதால், கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும்,” என்றார்.

Views: - 58

0

0