ஊராட்சி மன்ற தலைவர் வாகனம் மூலம் சரலை செம்மண் கடத்தல் : வார்டு உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார்

Author: kavin kumar
7 January 2022, 6:26 pm
Quick Share

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வாகனம் மூலம் சரலை செம்மண் கடத்தப்படுவதாக ஊராட்சி வார்டு உறுப்பினர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நவல்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஜேம்ஸ் என்பவர் தலைவராக உள்ளார். இந்த நிலையில் அந்த ஊராட்சியில் அய்யனார் கோவில் பகுதி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் இருந்த சரலை செம்மண்ணை பல நாட்களாக இரவில் ஜேசிபி மூலம் அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் அள்ளும் ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான பொக்லைன் மற்றும் லாரிகள் உதவியுடன் கடத்தப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு எந்த வித அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக அள்ளப்படும் மண்ணை அண்ணாநகர் 6வது வார்டு குடித்தெரு குறுக்குரோடு போடுவதற்கு பயன்படுத்தி உள்ளார்கள் என்றும், ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிக்கும் இந்த மண்ணை பயன்படுத்துவதாகவும், எனவே இதனை நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று அரசு நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டைஏற்படுத்தும், இந்த மண்ணைப் பயன்படுத்தி அமைப்பதால் சாலைகளின் தரமற்றதாக அமையும் என்றும், அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 388

0

0