சந்தனமரம் வெட்டிக் கடத்தல் : பொதுமக்களிடம் வசமாக சிக்கிய வாலிபர்கள்!!

8 September 2020, 3:41 pm
Kanyakumari Arrest - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 வாலிபர்களை ஊர்மக்கள் பிடித்து கருங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மானான்விளை பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் தானாக வளர்ந்து வந்த சந்தன மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மரங்களை கடந்த 2 வருடங்களாக மர்ம நபர்கள் வந்து வெட்டி கடத்தி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை மானான்விளையில் உள்ள அடர்ந்த மரங்கள் நிற்கும் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று சந்தேகபடும்படி நின்றது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் பார்த்த போது 2 வாலிபர்கள் அந்த பகுதியில் நின்றிருந்த ஒரு சந்தனமரத்தை வெட்டி சிறு சிறு கட்டைகளாக சாக்கு பையில் அடுக்கி கொண்டிருந்தனர்.

உடனே பொதுமக்கள் அந்த 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் வெகு நேரமாகியும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வராததால் அந்த 2 வாலிபர்களையும் பொதுமக்கள் கருங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.

இதனையடுத்த போலீசார் வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது25), ஜெருஷீம் (வயது 24) என்பது தெரியவந்தது.

இவர்கள் வெட்டி கடத்த முயன்ற சந்தன மர கட்டைகளின் மதிப்பு ருபாய் 20 ஆயிரம் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இரண்டு வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த சந்தன மர கடத்தலில் இவர்களுடன் வேறு பெரிய கடத்தல் கும்பல்களுக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்

Views: - 18

0

0