சசிகலா தனது தரத்தை குறைத்து கொள்கிறார் : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!!

12 July 2021, 6:11 pm
Former Minister Kadambur Raju- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : அதிமுகவில் இல்லாதவர்களுடன் பேசி சசிகலா தனது தரத்தினை குறைத்து கொள்கிறார் என்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமூட்டி கிராமத்தினை சேர்ந்த சுதா என்ற மாணவி கடந்த தமிழக அரசின் 7.5% ஒதுக்கீடு மூலமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பினை முடித்து இரண்டாம் ஆண்டு செல்கிறார்.

அவர் கல்லூரியில் சேருவதற்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தேவையான உதவிகளை செய்து இருந்தார். இந்நிலையில் சுதா மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கடம்பூர்.செ.ராஜூவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதன் பின்னர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வருவதில்லை என்ற முடிவினை எடுத்து இருக்கலாம்.

நதி நீர் பிரச்சினையில் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை மத்தியரசு தான் தீர்க்க வேண்டும. அதிமுக ஆட்சி காலத்தில் கர்நாடக அரசு எந்த அணையும் கட்ட சம்மதிக்கவில்லை, பிரச்சினைக்குரிய இடத்தில் கர்நாடக அரசு அணை எதுவும் கட்டியுள்ளது என்றால் மத்தியரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழக மக்களுக்கு பாதிப்பு தரும் எந்த திட்டத்தினை அதிமுக எப்போதும் அனுமதித்து இல்லை என்றும், நீட் போன்ற திட்டங்கள் காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் என்றும், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கடந்த 5 ஆண்டு ஆட்சிகாலத்தில் அதிமுக அரச அனுமதிக்கவில்லை.

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது பாதுகாத்தது அதிமுக அரசு தான், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தினை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வரக்கூடாது என்பதற்கான முயற்சி எடுத்து கொண்டு வந்தது அதிமுக அரசு.

எதிர்கட்சியாக இருந்த போது தான் மறைந்த முன்னாள் ஜெயலலிதா காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முறையாக பெற்று தந்தார் என்றும், ஆளும் கட்சி, எதிர் கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்படும் நிலையில் குரல் கொடுக்கும் முதல் இயக்கம் அதிமுக தான் என்றும், அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர்களிடம் தான் சசிகலா பேசி வருகிறார்.

சசிகலாவிடம் பேசிய அதிமுகவினர் ஒரு சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் அதிமுக என்ற பெயரில் கூட்டம் நடத்துவது வேடிக்கையானது.அதிமுகவில் இல்லாதவர்களுடன் பேசி சசிகலா தனது தரத்தினை குறைத்து கொள்கிறார்.நாட்டில் யார் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பது சசிகலாவிற்கு தெரியவில்லை.

அமமுக நிர்வாகிகளிடம் பேசி அதிமுகவை வழிநடத்த போகிறேன் என்று சசிகலா கூறுவது வேடிக்கையாக உள்ளது. சசிகலா 4 ஆண்டுகள் சிறையில் இருந்த காரணத்தினால் இங்கு என்ன நடந்தது என்று தெரிந்து இருக்காது. அதனால் தெரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்.

அமமுக நிர்வாகிகளிடம் கட்சியை வழிநடத்த போவதாக கூறும் சசிகலா அமமுகவை தான் வழி நடத்த வேண்டும், கோவில்பட்டியில் கூட அதிமுகவில் இல்லாத, டிடிவி தினகரனுக்காக தேர்தல் பணிபுரிந்தவர்களிடம் சசிகலா பேசியுள்ளதாக கூறினார்.

Views: - 71

0

0