சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சிறையில் சி.பி.ஐ. தடயவியல் துறை ஆய்வு!
23 September 2020, 8:05 pmதூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். வியாபாரிகளின் குடும்பத்தினர், நண்பர்கள், போலீசார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளம், கோவில்பட்டி கிளைச் சிறை, கிழக்கு காவல் நிலையம் அரசு மருத்துவமனை ஆகிம இடங்களுக்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் நேற்றுசி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் 17 பேர் அடங்கிய குழுவினர் சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் சாத்தான்குளத்துத்தில் விசாரணை நடத்தி, முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
இந்நிலையில் இன்று கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ மற்றும் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சுமார் 10 பேர் மாலை விசாரணை மேற்கொண்டனர். தந்தை மகன் இருவரும் தங்கி இருந்த அறைகளில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் சோதனை நடத்திய குழுவினர் விசாரணையை முடித்துக் கொண்டு மதுரைக்கு கிளம்பினர்