சாத்தான்குளம் சம்பவம் : ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
13 August 2020, 2:23 pmமதுரை : சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்தனர். இது தொடர்பாக, சம்பவத்தன்று பணியில் இருந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 காவலர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை இரட்டை கொலையாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களில் ஒருவரான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவலர் வெயில் முத்து ஆகியோர் மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.