சாத்தான்குளம் இரட்டைக் கொலை : கொரோனாவில் இருந்து குணமடைந்த காவலர் சிறையில் அடைப்பு.!!
17 August 2020, 10:43 amமதுரை : சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முருகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செய்யப்பட்ட தந்தை-மகன் காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, முத்துராஜ்,முருகன் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முத்துராஜ் குணமடைந்த நிலையில் தற்போது காவலர் முருகனும் பூரண குணமடைந்துள்ளார்.
அதனை தொடர்ந்து இருவரையும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.மேலும் மத்திய சிறைச்சாலையில் இரண்டு காவலர்களும் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல நேற்று காவலர் முத்துராஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்தது குறிப்பிடதக்கது.