ஒரே நாளில் 2 அடி உயர்வு.! கனமழையால் பெருகும் அணை நீர்மட்டம்.!!

5 August 2020, 1:39 pm
Sathy Bhavani Dam - Updatenews360
Quick Share

ஈரோடு : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 88 அடியை எட்டியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள சிறு நீரோடைகள் வழியாக வரும் தண்ணீர் மூலம் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடியாக உயர்ந்து தற்போது 88 அடியை எட்டியுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.07 அடியாகவும் நீர் இருப்பு 20.3 டிஎம்சி ஆகவும் நீர்வரத்து வினாடிக்கு 11261 கன அடியாகவும் உள்ளது. அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில் 200 கன அடி நீரும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும் 300 கன அடி நீரும் என 500 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டும் வருகிறது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 88 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 1

0

0