தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
Author: kavin kumar3 November 2021, 5:36 pm
சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளித்தால் ஊருக்குச் சென்று வருபவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 05ம் தேதியும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 6-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால், சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
0
0