போராட்டத்தில் குதித்த பள்ளிக் குழந்தைகள் : நடுநிலைப் பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய கோரி பிஞ்சுகளின் மறியலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2022, 10:58 am
Sathy Mariyal - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை சரி செய்து தரக்கோரி பள்ளி குழந்தைகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையம் எதிரில் நகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் கட்டிடங்கள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளதால் இங்கு குழந்தைகள் உணவு அருந்த அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதனை சரி செய்து தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பள்ளி குழந்தைகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இங்கு 500 குழந்தைகள் படித்து வருவதாகவும் குழந்தைகளுக்கு கல்வி கற்று தர போதிய ஆசிரியர்கள் இல்லை எனவும் கூறி பள்ளி குழந்தைகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் தனது பெற்றோர்களுடன் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் சரவணகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த குழந்தைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டிடங்களை ஆய்வு செய்து உடனடியாக சிதிலம் அடைந்துள்ள கட்டங்களை சரி செய்து தரப்படும் எனவும் கல்வி கற்று தர மேலும் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் எனவும் உறுதியளித்தை அடுத்து பள்ளி குழந்தைகள் கலைந்து சென்றனர்.

சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி குழந்தைகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 880

0

0