பணியை விட்டு நீக்கிய பள்ளி நிர்வாகம் : ஆட்டோவோடு தீக்குளித்து தற்கொலை செய்த ஓட்டுநர் !!

12 January 2021, 3:12 pm
Driver Suicide - Updatenews360
Quick Share

கேரளாவில் தனியார பள்ளியில் பணியாற்றிய ஓட்டுநரை பணியில் இருந்து நீக்கியதால் மனவேதனை அடைந்த அவர், பள்ளி வாயிலில் தனது ஆட்டோவுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மரதெர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கடந்த 16 ஆண்டுகளாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

கொரோனா தொற்று காலத்தில் மூடப்பட்டிருந்த பள்ளியிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் இவரை பணியிலிருந்து நீக்கியது. ஊரடங்கு காரணமாக பணியில் இருந்து இவர் உட்பட வாகன ஓட்டுனர்கள் மற்றும் பெண் உதவியாளர்கள் என 86 பேரை பள்ளி நிர்வாகம் நீக்கியது.

ஸ்ரீகுமாருடன் அங்கு உதவியாளராக பணிபுரிந்து வந்த அவரது மனைவியையும் பணி நீக்கம் செய்ததால் குடும்பமே கடும் வறுமைக்கு தள்ளப்பட்டது. பள்ளியில் இருந்து ஒரே நேரத்தில் ஏராளமானோரை நீக்கியதால் நிர்வாகத்தோடு பாதிக்கப்பட்டோர் முறையிட்டு போராடியபோது ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறியது.

மேலும், வேறு பலரையும் பணிக்கு அமர்த்தி விட்டு ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ஸ்ரீகுமார் மனவேதனையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனக்கு மீண்டும் வேலை வழங்கப்படமாட்டாது என உணர்ந்த ஸ்ரீகுமார், பள்ளி வாயிலில் தனது ஆட்டோவுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி நிர்வாகம் அவரது குடும்பத்திற்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும், ஸ்ரீகுமாரின் மனைவிக்கு பள்ளியில் பணி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை துணை ஆட்சியருடன் பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது தெரிவித்தது.

Views: - 51

0

0