மாணவர்களா..? இல்ல மந்தைகளா..? 30 மாணவர்கள் இருக்க வேண்டிய வகுப்பில் 80 பேரா..? கொந்தளிக்கும் கல்வி ஆர்வலர்கள்..!!

Author: Babu Lakshmanan
7 July 2022, 11:20 am
Quick Share

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் படிக்க வேண்டிய இடத்தில் 80 மாணவ, மாணவியர்கள் நெருக்கடியில் படிக்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப பள்ளி அல்லது தொடக்க பள்ளி என்பது கல்வியின் நிலைகளில் ஒரு நிலையாகும். ஆரம்ப கல்வி என்பது கட்டாய கல்வியின் முதல் கட்டமாகும். இதில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்க கல்வியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஐய்யங்கார் குளம் ஊராட்சியில் 1924ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 324 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு வகுப்பறையில் 30 மாணவ மாணவிகள் மட்டுமே படிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் வழிகாட்டி உள்ள நிலையில் இந்தப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் சுமார் 80 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரும் அவல நிலை உள்ளது.

இந்த பள்ளியில் 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லாததால் இருக்கின்ற இட நெருக்கடியில் காற்றோட்டம் இல்லாமல் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருவதும் ,கொரோனா வைரஸ் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மாணவ மாணவிகளை ஆட்டுமந்தை போல் அடைத்து வைத்து பாடம் நடத்துவதும் கல்வி துறையின் இயலாமையை காட்டுகின்றது.

ஏற்கனவே இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தமிழக அரசுக்கு கூடுதல் வகுப்பறை கேட்டு பலமுறை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு கடிதம் வைத்துள்ளனர். அப்படி இருப்பினும் இதுநாள் வரையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டாததால் நெருக்கடியான இடத்தில் மாணவ மாணவிகள் சிரமத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.

இட நெருக்கடி காரணமாக பள்ளி மாணவ மாணவியர்கள் உணவு அருந்தவும் சுதந்திரமாக விளையாடவும் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வசதியும் இல்லாத காரணத்தினால் மாணவ மாணவிகள் தங்களது வீட்டில் இருந்து குடிதண்ணீர் எடுத்து வருகின்றனர்.

இவ்வளவு அதிகமான மாணவ மாணவியர்கள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கூடுதலாக 7 வகுப்பறைகள் கட்ட வேண்டும் எனவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 115

0

0