கிண்டல் செய்த மாணவர்களுக்கு தர்மஅடி கொடுத்த ஆசிரியர்… பெற்றோர் முன்னே குஸ்தி வாத்தியராக மாறி அட்டகாசம்..!!

Author: Babu Lakshmanan
2 October 2021, 12:05 pm
mayiladudurai teacher - updatenews360
Quick Share

நாகை : மயிலாடுதுறை அருகே கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை அடித்த ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மகேந்திரன். இவரை நேற்று பள்ளியில் சில மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 12ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், ஆகாஷ், சுதர்சன், ஹரிஷ் ஆகிய நான்கு மாணவர்களை ஆசிரியர் மகேந்திரன் அடித்ததாக கூறப்படுகிறது.

கிண்டல் செய்த மாணவர்கள் ஆசிரியர் தங்களை அடித்து விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர் கிளியனூர் ஊராட்சிமன்ற தலைவரும், பள்ளியின் கல்விகுழுத் தலைவருமான முஹம்மது ஹாலீதுவை அழைத்துச் சென்று பள்ளி தலைமையாசிரியர் கலிவரதனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த சமயம் அங்கு வந்த தமிழாசிரியர் மகேந்திரன், மாணவர்களின் பெற்றோர், ஊராட்சிமன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊராட்சிமன்ற தலைவரை அடிக்க முற்பட்டதால், கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது, தமிழாசிரியர் மகேந்திரன் தலைமையாசிரியர் அறையில் இருந்த டேபிளை தள்ளிவிட்டு பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் அறிந்த பொதுமக்கள் பள்ளியின் முன்பு திரண்டனர். இச்சம்பவம் அறிந்த பெரம்பூர் போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் அனைத்தும் குஸ்தி போடும் மையங்களாக மாறி வருவது வேதனை அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 463

0

0