‘தமிழகத்தில் உள்ள அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள்’ – இன்று முதல் தொடங்குகிறது மாணவர் சேர்க்கை ..!

17 August 2020, 9:01 am
Quick Share

மாணவர் சேர்க்கை நடைபெறும் நாட்களிலேயே இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பு தாமதமாகி வருகிறது. இந்நிலையில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்கள் சேர்க்கை இன்று தொடங்குகிறது.

1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையும் இன்று முதல் தொடங்கவுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதன்படி, பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நாளை ஒதுக்கி மாற்றுச்சான்றிதழ் வழங்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்கள் நேரில் வரத் தேவையில்லை, எனினும் பெற்றோர்கள் நேரில் வந்து ஆவணங்களை சமர்பித்து அட்மிஷன் பெறலாம். ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு தனியாக ஒரு நாளை ஒதுக்கவும், அந்த விபரங்களை அறிவிப்பு பலகையில் வைக்கவும் அறிவுறுத்தப்படுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 2 மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே சேர்க்கைக்கு அனுமதிக்கபடுவர்கள். சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களில் ஏதேனும் ஆவணம் இல்லாத பட்சத்தில் பின்னர் அளிக்கவும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சேர்க்கை நடைபெறும் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் மற்றும் ஏனைய கல்விசார் விலையில்லா பொருட்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனோ கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை பள்ளிக்கு அழைக்காமல் தொலைபேசி வாயிலாக மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வரும் 24-ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிபெண் சான்று அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படவுள்ளது.

Views: - 133

0

0