சண்டையை விலக்கி விட்டு சமாதானம் செய்ய முயன்ற ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கத்திக்குத்து.! கோவையில் அரங்கேறிய கொடுமை!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2021, 11:44 am
கோவை : கோவை அரசு மருத்துவமனை முன்பு சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை விலக்கி விட்ட ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 25). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவர் நேற்று அரசு மருத்துவமனை முன்பு திருச்சி சாலையில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிந்தார்.
அப்போது அங்கு இரண்டு பேர் தகாத வார்த்தையால் பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த முஸ்தபா அவர்கள் சண்டையை விலக்கி வைத்து கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குண்டு மணிகண்டன் (வயது 35) என்பவர் கத்தியால் முஸ்தபாவை குத்தியுள்ளார். இதில் அவரது தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் குண்டு மணிகண்டன் புலியகுளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0