ஜாமீனில் வெளியே வந்த போக்சோ குற்றவாளிக்கு கத்திக்குத்து : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2021, 5:19 pm
Murder Attempt -Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே மருதூரில் ஜாமீனில் வெளிவந்த போக்சோ குற்றவாளியை கத்தியால் சரமாரி குத்தி சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பனப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் மருதூரில் உள்ள தனியார் டிபார்மெண்டல் ஸ்டோரில் பணிபுரிந்து வந்தார்.

அந்த கடையின் உரிமையாளரான பிரின்ஸ் ( வயது 48 ) சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காரமடை காவல் துறையினர் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பதுங்கியிருந்த பிரின்ஸ் மற்றும் சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் 90 நாட்கள் சிறையிலிருந்த பின்னர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளான்.பின்னர்,மருதூரில் உள்ள தனது டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு கடந்த 4 நாட்களாக வந்து சென்றுள்ளான்.

இந்நிலையில் நேற்றிரவு சுமார் 9 மணியளவில் கடையை மூடி விட்டு கடைக்கு பின்புறம் உள்ள வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளான். அப்போது,அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவன் திடீரென்று தனது கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளான்.இதனால் பிரின்சிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர் விரைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரின்சை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவனுக்கு அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்தவனுக்கு கத்திக்குத்து நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டனரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 252

0

0