மும்மொழி கல்விக் கொள்கை விவகாரம் : முதலமைச்சரின் முடிவுக்கு சீமான் வரவேற்பு..!
3 August 2020, 1:15 pmசென்னை : மும்மொழி கல்விக் கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன..? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனிடையே, மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையை மட்டுமே தொடரும் என முதலமைச்சர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி கல்வி கொள்கை வேதனையும், வருத்தத்தையும் அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பிற்கு பாராட்டு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில்,”புதிய கல்விக்கொள்கையின் ஒரு கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்!
மாநிலங்களின் தன்னாட்சி கல்வியுரிமைகளை மொத்தமாய் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து ஒற்றைப்பாடத்திட்டத்தின் மூலம் தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.