தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 7.2 டன் ரேசன் அரிசி பறிமுதல்…

28 February 2021, 11:33 am
Quick Share

கோவை: கோவை போத்தனூர் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 7.2 டன் ரேசன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை போத்தனூர் செட்டிபாளையம் – ஈச்சனாரி சாலையில் உள்ள தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்படுவதாக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ராமதுறைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய் அலுவலர் உத்தரவின் பேரில் மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில், பறக்கும் படை தனி வருவாய் அலுவலர் குமார், குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் சசிகுமார் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வடிவேலன் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று விசாரித்தனர்.

ஆனால் அங்கிருந்த குடோன் உரிமையாளர் யார் என்பது தெரியாததால், குடோன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வெங்காய குடோனாக பயன்படுத்தப்பட்டிருந்த அந்த குடோனில் 5 அறைகளில் ரேசன் அரிசிகளை மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 7.2 டன் ரேசன் அரிசியை உணவு வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் உரிமையாளர் மற்றும் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 10

0

0