7 மாதங்களில் 3 ஆயிரம் கிலோ போதை பொருட்கள்..! : கோவை போலீஸ் அதிரடி…!

Author: Udhayakumar Raman
23 July 2021, 9:44 pm
Quick Share

கோவை: கோவை மாநகர் பகுதிகளில் கடந்த 7 மாதங்களில் 3 ஆயிரத்து 248 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போதை பொருட்களை விற்பனை செய்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி கோவை மாநகர பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத கஞ்சா விற்பனை, குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை, மது விற்பனை மற்றும் போதை தரக்கூடிய மாத்திரைகள் /ஊசிகள் விற்பனை செய்த நபர்கள் மீது தனிப்படைகள் அமைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் முதல் நேற்று (22ம் தேதி) வரையிலான காலங்களில், 660 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 673 நபர்கள் கைது செய்யப்பட்டு, 3248.900 கிலோகிராம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கோவை மாநகர் மற்றும் கோவை மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்ய கர்நாடகாவிலிருந்து கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்ட ஒன்றரை டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை தரக்கூடிய மாத்திரைகள், ஊசி விற்றவர்கள் மீது இவ்வருடம் கஞ்சா விற்றதாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 66 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 55.070 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போதை தரக்கூடிய மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்றது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை மருந்தகங்களில் விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவரோதமாக மது விற்பனை, வெளிமாநில மது விற்பனை மற்றும் கள் விற்பனை செய்த நபர்கள் மீது இந்தாண்டு இதுவரை 672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 765 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 15,835 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை மாநகர காவல்துறையின் சார்பாக போதை பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதை
பொருள் விற்பனை தொடர்பாக தகவல்கள் 81900-00100 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பிலும், 94981-81213 மற்றும் 0422 – 2300970 ஆகிய எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் தகவல் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு மாநகர போலீசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Views: - 183

0

0