ரூ.1.25 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: நைஜீரிய இளைஞர் கைது…கோவை போலீஸ் அதிரடி..!!

19 July 2021, 3:06 pm
Quick Share

கோவை: கோவை ரயில் நிலையத்தில் போதை பொருள் கடத்தி வந்த நைஜீரியா வாலிபர் கைது செய்யப்பட்டு ரூ.1 1/4 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு டெல்லியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்தது. இந்த ரயிலில் வரும் நைஜீரிய இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று இரவு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ரயில் நிலைய வளாகத்தில் முகாமிட்டனர்.

அவர்கள் குறிப்பிட்ட ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை ரயில்வே போலீசாருடன் இணைந்து கண்காணித்தனர். வெளிநாட்டு வாலிபர்கள் போன்று தோற்றம் கொண்ட இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அவர்கள் உடைமைகளை சோதனை செய்த போது அதில் தடைசெய்யப்பட்ட மெத்தபிட்டமின் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து சுமார் ரூ.1 1/4 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் எங்கு வாங்கினார்? விற்பனைக்காக கொண்டு சென்றாரா? என்பது குறித்து விசாரித்தனர். தொடர்ந்து போதைப்பொருள் கடத்தி வந்த நைஜீரியாவை சேர்ந்த எட்வின் கிங்க்ஸ்லி என்பவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு நைஜீரிய வாலிபர் இன்பார்மராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பாஸ்போர்ட் வைத்துள்ளனரா? உரிய ஆவணங்களுடன் தான் இந்தியா வந்துள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 131

0

0