செல்வராகவன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக்காயிதம்’: நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது?

Author: Aarthi Sivakumar
19 August 2021, 5:45 pm
Quick Share

செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் அருண் மாதேஸ்வரனின் ‘சாணிக்காயிதம்’ படத்தில் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை வென்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குநராகவும், நடிகை ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்த சுதா கொங்கராவின் ‘இறுதிச்சுற்று’ படத்தில் டயலாக் போர்ஷனையும் எழுதிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ‘சாணிக்காயிதம்’ படத்தை இயக்குகிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரித்துள்ள ‘ராக்கி’ படத்தின் இயக்குநரும் அருண் மாதேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி தந்ததால், கடந்த மாதம் முதல் ‘சாணிக்காயிதம்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு முழு படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், ‘சாணிக்காயிதம்’ நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே சாணிக்காயிதம் படத்திற்காக செல்வராகவன் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை தொடங்கிய புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Views: - 598

1

0