தி.மு.க எம்.எல்.ஏ வீட்டில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் ரெய்டு..!

4 December 2019, 8:52 am
Dmk mla-updatenews360
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் இல்லத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் தீடீர் சோதனை நடத்தினர்.

செங்கல்பட்டு தொகுதி மறைமலை நகரில் வசித்து வரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று மாலை சரக்கு மற்றும் சேவைப் பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியதில், வரலட்சுமியின் கணவர் நடத்திவரும் மேன் பவர் நிறுவனத்துக்கான ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

மதுசூதானனின் மேன் பவர் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மோட்டார் நிறுவனங்கள், ஐடி பூங்காக்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பணியாளர்களை அனுப்பி வருகிறது. ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனையில் கிடைத்த ஆவணங்கள், கோப்புகள் தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சோதனை முழுவதும் முடிந்த பின்னரே முழுத் தகவலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல கூடுவாஞ்சேரியிலுள்ள அலுவலகம், ஆப்பூரில் உள்ள வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமியின் கணவர் மதுசூதனன் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.