பட்டதாரிகளை குறி வைத்து பல லட்சம் ரூபாய் அபேஸ்.. டீக்கடை நடத்தி மோசடி செய்த இளம்பெண்!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2023, 4:15 pm
Fraud - Updatenews360
Quick Share

கோவை குனியமுத்தூர் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் நிரஞ்சனா. இவர் தனது நண்பர்கள் மூலம் தனியாக ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை மட்டும் குறி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அரசு துறைகளான பட்டு வளர்ச்சித் துறை ,ஊரக வளர்ச்சித்துறை, பதிவுத்துறை ஆகிய துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு சில லட்சங்கள் லஞ்சம் தர வேண்டும் எனவும் கூறி ஒவ்வொரு பட்டதாரியிடமும் இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை நிர்ணயித்து வசூல் செய்து வந்துள்ளார்.

பணம் கொடுத்து ஆறு மாதத்திற்குள் அரசு வேலை நிச்சயம் என்று வாக்குறுதி தந்த நிரஞ்சனா இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு வேலையும் வாங்கித் தராததால் சந்தேகம் அடைந்த பணம் கொடுத்த பட்டதாரிகள், நிரஞ்சனாவை நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது தனக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை நன்றாக தெரியும்., தன்னை மிரட்டி பார்த்தால் விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என அச்சுறுத்தியுள்ளார் நிரஞ்சனா.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சுமார் 9 பேர் 27 லட்சம் ரூபாய் வரை தங்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக நிரஞ்சனா மீது கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

எந்த ஒரு அலுவலகமும் நிரந்தர முகவரியும் இல்லாமல் இருக்கும் நிரஞ்சனா என்ற இளம் பெண்ணை நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ள பட்டதாரிகள் எப்படியும் தங்களுக்கு அவர் அரசு துறையில் வேலை வாங்கித் தருவார் என்ற நம்பிக்கையுடன் பணம் கொடுத்தோம்., ஆனால் இப்படி ஏமாற்றுவார் என்று தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

தனது நண்பர்கள் மூலமாக ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்ளும் நிரஞ்சனா ஆட்களுக்கு தகுந்தார் போன்று ஆசை வார்த்தைகள் கூறி பணம் வசூலித்ததும் அதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.
காவல்துறையினரிடம் புகார் அளித்து அவர்கள் குற்றவாளிகளை பிடித்து விசாரிப்பதற்கு தாமதமாகும் என்று கருதி பாதிக்கப்பட்டவர்களே பண மோசடியில் ஈடுபட்ட நிரஞ்சனாவை பிடித்து மாநகர குற்ற பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சூழலில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Views: - 280

0

0