கோவையின் முக்கிய சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவு: துர்நாற்றத்தால் அவதியுறும் வாகனஓட்டிகள்..கண்டுகொள்ளுமா மாநகராட்சி!!
Author: Aarthi Sivakumar11 October 2021, 4:26 pm
கோவை: மாநகர பகுதியின் முக்கிய சாலையில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மாநகர பகுதியில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், கோவை காந்திபுரம் அருகே அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் அருகிலுள்ள ஆவாரம்பாளையம் சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கின் நுழைவாயில் அமைந்துள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது.
மழை காரணமாக சாக்கடை கால்வாயில் நீர் அதிகளவு வருவதால் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சாக்கடை நீர் வெளியேறுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
அருகிலேயே மருத்துவமனை, உணவகங்கள் உள்ளதால் சாக்கடை நீர் வெளியேற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அப்பகுதி மக்கள், மழை காலங்களில் இதுபோன்று ஆண்டுதோறும் அதேபகுதியில் சாக்கடை நீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுவதாகவும், மாநகரின் முக்கிய சாலை என்பதால் நிரந்தர தீர்வை மாநகராட்சி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0