காவல்துறையில் பாலியல் அத்துமீறல்.. நாட்டின் 2வது திருநங்கை காவலர் பரபரப்பு புகார் : ராஜினாமா செய்ய முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 3:51 pm
Transgender Police - Updatenews360
Quick Share

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. இவர் தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

ஏற்கனவே ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் தற்போது கோவைக்கு கடந்த 2020 ம் ஆண்டு மாற்றப்பட்டார்.

கோவை மாநகர காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் திருநங்கை காவலர் நஸ்ரியா இன்று தனது ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு நஸ்ரியா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் காவல்துறையில் பணியில் சேர்ந்ததில் இருந்து , பல்வேறு அத்துமீறல்களை எதிர்கொண்டு வருகிறேன். இந்நிலையில் தற்பொழுது தான் பணியாற்றும் பிரிவில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை என்பவர் தனது பாலினம் குறித்தும், ஜாதி குறித்தும் இழிவாக பேசுவதாகவும், மனரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதனால் என்னால் இனி காவல்துறையில் பணியில் இருக்க முடியாது. இதனால் நான் எனது வேலையை ராஜினாமா செய்ய உள்ளேன். அந்த கடிதத்தை கொடுக்கவே காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நஸ்ரியாவை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

அப்போது திருநங்கை காவலர் நஸ்ரியா சொல்லும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு , புகாரை எழுத்து பூர்வமாக கொடுக்கும் படி அறிவுறுத்தினார்.

இதனையடுத்து திருநங்கை காவலர் நஸ்ரியா எழுத்து பூர்வமான புகார் அளித்தார். பின்னர் திருநங்கை காவலர் நஸ்ரியா அளித்துள்ள புகார் குறித்து துணை ஆணையர் சந்தீப் விசாரிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருநங்கை காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் அவர் தற்போது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Views: - 98

0

0