பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : டி.ஜி.பி.,யை நீக்க கோரி மாதர்சங்கம் போராட்டம்!!

2 March 2021, 5:27 pm
Mathar Sangam Protest -Updatenews360
Quick Share

கோவை : பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டி.ஜி.பி ராஜேஷ் தாசை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.,யாக பதவியில் இருந்த ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி பகிரங்க புகார் தெரிவித்தார்.

காவல் துறையில் ஐ.பி.எஸ் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பெண்களின் நிலைமை என்ன என்று நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்தது. மேலும், புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு குறித்து விசாரிக்க உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பெண் அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டி.ஜி.பி ராஜேஷ் தாசை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதர் சங்க நிர்வாகிகள் சுதாசுந்தர்ராமன், சுகந்தி, ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Views: - 9

0

0