கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவிக்கு பாலியல் சீண்டல் : இயக்குநர் ஷங்கர் மருமகன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2021, 4:39 pm
புதுச்சேரி : கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குநர் ஷங்கரின் மருமகனும், கிரிக்கெட் வீரருமான ரோகித் உட்பட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி துத்தித்பட்டு கிராமத்தில் உள்ளது புதுச்சேரி கிரிக்கெட் கிளப். இங்குள்ள மைதானம் மூடப்பட்டு இருந்ததால் முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது பயிற்சியில் ஈடுபட்ட 17 வயது மாணவியிடம் கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் (வயது 17) பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அச்சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பயிற்சி அளிப்பவரை அனுசரித்து செல்லுமாறு கூறியுள்ளனர் மேலும் சிறுமியின் புகாரை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அச்சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நல குழு விடும் புகார் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமிக்கு பயிற்சியளித்த கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மற்றொரு கிரிக்கெட் வீரர் ஜெயக்குமார், கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் கிளப் கேப்டன் தாமோதரன் மகனும், இயக்குநர் ஷங்கரின் மருமகனான ரோஹித் உள்ளிட்ட 4 பேர் மீது தவறுக்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ பிரிவின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் மகன் ரோகித் விளையாட்டு அணியின் கேப்டனாகவும் உள்ளார். சமீபத்தில்தான் இயக்குனர் ஷங்கர் மகளுடன் ரோகித்துக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
0
0