வீடு வீடாக கொரோனா பரிசோதனை என கூறி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் : போலி சுகாதார ஆய்வாளர் கைது!!

Author: Udayachandran
14 October 2020, 12:43 pm
Kanya Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை என வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலி சுகாதார ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் அடிக்கடி டிப்டாப் ஆசாமி ஒருவர் அரசு சுகாதார ஆய்வாளர் என்று கூறி வீடுகளுக்கு சென்று கொரோனா சோதனை என்ற பெயரில் வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.

ஆனால் யாரும் புகார் அளிக்க முன் வராத நிலையில் அவரது இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதேப்போல் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் பெற்றோர் அந்த டிப்டாப் ஆசாமி குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனையடுத்து அந்த சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில் அந்த ஆசாமி ஒரு வீட்டிற்கு சென்று சுகாதார ஆய்வாளர் என கூறி வீட்டிற்குள் நுழைய முயன்ற போது போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அபிலாஷ்பெர்லின் என்பதும் 41-வயதான இவர் HBC வங்கியில் கடன் வசூலிப்பாளராகவும் தெரிய வந்தது. மேலும் இவர் கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி சுகாதார ஆய்வாளர் என கூறி அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சோதனை செய்ய செல்வது போன்று சென்று வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அபிலாஷ் பெர்லின் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகர்கோவில் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 51

0

0