காதல் திருமணம் செய்த சகோதரிகள்.! தற்கொலை செய்த சகோதரன்.! “பாசக்காரத் தாய்“ செய்த விபரீதம்.!!

10 August 2020, 6:11 pm
Trichy Suicide - Updatenews360
Quick Share

திருச்சி : உடன்பிறந்த சகோதரிகள் அனைவரும் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த சகோதரன் தற்கொலை செய்ததால் பாசக்காரத் தாயும் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60) விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி (வயது 50), இவர்களது மகன்கள் பால்ராஜ் (வயது 26), சின்னத்துரை (வயது 24), மகள்கள் மீரா (வயது 30), கல்பனா (வயது 23), மீனா (வயது 21) ஆவர்.

இதில் மீரா மற்றும் கல்பனா ஆகிய இரண்டு பேரும் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார் பால்ராஜ் அப்போது அவரது தங்கை மீனா முசிறியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலிப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இந்த காதல் வேண்டாம் என்று தனது சகோதரிக்கு அறிவுரை வழங்கினார்.

இதனை ஏற்க மறுத்த தங்கை மீனா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று அவர் விரும்பிய வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மனமுடைந்துபோன அண்ணன் பால்ராஜ் நேற்று முன்தினம் அதிகாலை ஊருக்கு அருகே பங்குனி வாய்க்கால் கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மகனை இழந்த துக்கம் தாளாமல் இருந்த பால்ராஜ் தாய் நீலாவதியும் நேற்று வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் நீலாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

குடும்பத்தில் சகோதரிகள் அனைவரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனையில் சகோதரர் தற்கொலை செய்த நிலையில், மகனை இழந்த துக்கம் தாளாமல் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.