காவிரி ஆற்றில் மாயமான சிறுவர்கள்: 2 மாதங்களுக்கு பிறகு எலும்புக்கூடுகள் கிடைத்ததால் பரபரப்பு..!!
3 February 2021, 9:37 amதிருச்சி: காவிரி ஆற்றில் மாயமான சிறுவர்களின் எலும்புக் கூடுகள் 2 மாதங்களுக்கு பின்னர் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியில் வசித்து வரும் ஜெயலட்சுமி என்பவரின் உறவினர்கள் கரூரைச் சேர்ந்த ரகுராமன் ,ரேவதி ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் 17. 11. 2020 அன்று முசிறிக்கு வந்திருந்தனர். உறவினர்களுடன் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற ரகுராமன் – ரேவதியின் குழந்தைகளான ரித்தீஷ் குமார், மிதுனேஷ் ஆகியோர் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமாகினர்.
முசிறி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஒரு வாரமாக தேடியும் காவிரி ஆற்றிலிருந்து குழந்தைகளின் சடலத்தை மீட்க முடியாமல் போனது. குழந்தைகளின் பெற்றோர் முசிறி
துணை ஆட்சியர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் புகார் தெரிவித்தும் குழந்தைகளின் சடலத்தை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் இன்று ரகுராமன் – ரேவதி ஆகியோர் ஆற்றில் மூழ்கி மாயமான தங்களின் குழந்தைகளுக்கான இறுதி சடங்கு செய்வதற்காக வந்தனர். அப்போது குழந்தைகள் மாயமான இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி இரு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் மண்ணில் பாதி புதைந்த நிலையில் தெரிவதாக அப்பகுதியில் குளித்து கொண்டிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்த எலும்புக்கூடுகளை உறவினர்கள் உதவியுடன் ரகுராமன் – ரேவதி ஆகியோர் மீட்டனர். பின்னர் இதுகுறித்து முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எலும்புக்கூடுகளை கைப்பற்றி டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பினர். 2 மாதங்களுக்கு முன்பு முசிறி காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான குழந்தைகளின் எலும்பு கூடுகள் கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0