துவங்கியது ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020’..!

1 August 2020, 1:45 pm
Cbe Hackathon - Updatenews360
Quick Share

கோவை : ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் இந்திய ஹேக்கத்தான் 2020 துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் உருவாக்கும் போட்டியான ‘ஸ்மார்ட் இந்திய ஹேக்கத்தான் 2020’ போட்டிகளின் துவக்க விழா இன்று கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

இன்று தொடங்கி வரும் மூன்றாம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த போட்டிகள் தமிழகத்தில் 7 ஒருங்கிணைப்பு மையங்களில் நடைபெற உள்ளன. நாடெங்கிலும் 40 ஒருங்கிணைப்பு மையங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 164 பொறியியல் மாணவர்களை உள்ளடக்கிய 27 குழுக்கள் கலந்து கொள்கின்றன.

இந்த துவக்க விழா நிகழ்ச்சி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்றது. இதில் மாநிலங்களுக்கான மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முதன்மை கண்டுபிடிப்புகளுக்கான அலுவலர் அபய் ஜேரே ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் ராமன், கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் கூடுதல் பொது மேலாளர் காஞ்சன் கேத்கர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்