இந்து, கிறிஸ்துவ பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்த மகன் : வேதனை தாளாமல் இஸ்லாமிய பெற்றோர் தற்கொலை

14 June 2021, 10:04 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் இந்து பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற மகனின் மீண்டும் கிறிஸ்துவ பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இருந்ததால் மனமுடைந்த இஸ்லாமிய பெற்றோர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த முகமது ஜலீல் என்பவர் தன்னுடைய மனைவி மெகருன்னிசா மற்றும் மாற்றுத்திறனாளி மகன் ஆசிக் மீரான் ஆகியோருடன் வசித்து வந்தார். முகமது ஜலீல் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அரசு மனநல அலுவலராக பணிபுரிந்து 5 வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றார். மகன் ஆசிக் மீரான் அயனாவரம் பகுதியை சேர்ந்த சந்தியா தேவி என்ற இந்துமத பெண்ணை காதலித்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. சில மாதங்களுக்குள்ளாகவே கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சந்தியா தேவி விவாகரத்து பெற்றார். தன்னுடைய கௌரவம் கெட்டுப் போக கூடாது என்ற காரணத்துக்காக முகமது ஜலீல் தன் மனைவி ,மகனுடன் காஞ்சிபுரத்துக்கு வந்து குடியேறினார்.

ஆசிக் மீரான் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணி புரிந்தார். தன்னுடைய கிறிஸ்துவ நண்பனின் சகோதரியை காதலித்து வருகிறார். ஏற்கனவே அவருக்கு திருமணமாகி பத்து வயதில் மகள் உள்ளார். இதனை தன் பெற்றோர்களிடம் கூறிய ஆசிக் மீரான் எலிசபெத் என்ற அந்தப் பெண்ணை ஒரு சில தினங்களில் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன் என அழுத்தமாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர்கள் மகனின் மனதை மாற்ற முயற்சித்து பெண் தேடும் படலத்தை துவக்கினர். இதை ஏற்றுக்கொள்ளாத ஆசிக் மீரான் பிடிவாதமாக எலிசபெத்தை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார்.

இன்று மாலை இரண்டு மணி நேரம் தன் பெற்றோர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . பின்னர் ஒருவழியாக சமாதானமாகி மூன்று பேரும் டெட்ரா பேக் என்ற அட்டைப்பெட்டியில் உள்ள குளிர்பானத்தை அருந்தியுள்ளனர். மேல்மாடியில் துணிகள் துவைத்து காயவைத்துவிட்டு வருகிறேன் என கூறி விட்டு ஆசிக் மீரான் மாடிக்கு சென்று படுத்து தூங்கி விட்டார். சற்று நேரம் கழித்து மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தபோது பெற்றோர்கள் இருவரும் தூங்கி கொண்டிருந்தார்கள். வித்தியாசமாக தூங்குவதை கண்ட ஆசிக் மீரான் பெற்றோர்களை எழுப்ப முயன்றபோது எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருவரும் இறந்து கிடந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற ஆசிக் மீரான் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சிவகாஞ்சி காவல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள். திருமணமாகி 10 வயது மகளுடன் வசித்து வரும் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த ஆசிக் மீரான் செயலுக்கு எதிர்வினையாற்றவும், அதே சமயம் பாசத்தின் காரணமாகவும் பெற்றோர்கள் தாங்கள் குடித்த குளிர்பானத்தில் மட்டும் விஷத்தை கலந்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு சிலர் ஆசிக் மீரானின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களை குளிர்பானத்தில் விஷத்தைக் கொடுத்து கொன்றிருக்கலாம் எனவும் சந்தேகத்துடன் பேசி வருகின்றனர்.

Views: - 339

3

0