புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் : குமரி எம்பி விஜய்வசந்த் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2021, 7:12 pm
Farmers MP Vasanth - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : புயல் மற்றும் மழை காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்பி விஜய் வசந்த் உறுதியளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட பூதப்பாண்டி, காட்டுப்புதூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீசிய டவ் தே புயல் மற்றும் மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் ரப்பர் மரங்கள் மற்றும் பயிர்கள் சேதம் அடைந்தன.

சேதமடைந்த வாழைத் தோட்டங்கள் மற்றும் இதர பயிர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட விஜய் வசந்த் இன்று விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புயல் மற்றும் மழை காரணமாக சேதமடைந்த பயிர்கள் மற்றும் வாழைமரங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது முழுமை அடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக அரசை வலியுறுத்தி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் ஏற்கனவே கொரானாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் விவசாயிகள் தற்போது வீசிய புயல் மற்றும் மழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு தாமதம் செய்யாமல் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இது குறித்து தமிழக அரசிடம் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

Views: - 178

0

0