3 ஆண்டுகளுக்கு பிறகு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த திட்டம்..!!

Author: Rajesh
8 May 2022, 6:41 pm
Quick Share

சென்னை: 3 ஆண்டுகளுக்கு பிறகு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 20ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணி கைப்பற்றியது. இந்நிலையில் மீண்டும் பதவிக்கு வந்துள்ள நாசர் தலைமையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் இன்று மதியம் 2 மணியளவில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கான நிதி மற்றும் மூத்த நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ஜவுகார் ஜானகி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 574

0

0