சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமலை நம்பிக்கு வீர தீர செயலுக்கான பதக்கம் : தமிழக அரசு அறிவிப்பு..!

14 September 2020, 1:00 pm
Quick Share

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமலை நம்பிக்கு வீர தீர செயலுக்கான பதக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி நாளை தமிழக காவல், சீரடைப் பணி அதிகாரிகள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இந்த சூழலில், திருநெல்வேலியைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பா.திருமலை நம்பிக்கு முதலமைச்சருக்கான வீர தீரச் செயலுக்கான பதக்கம், ரூ.5 லட்சம் பரிசு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்த அரசின் அறிவிப்பில், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட, தலைமறைவாக இருந்த குற்றவாளி இராமையா என்கிற ரமேஷை பிடித்தபோது, திருநெல்வேலி கங்கைகொண்டான் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணியாற்றும் பா. திருமலை நம்பி பலத்த காயமடைந்தார்.

அதாவது, திருமலை நம்பியை இரும்புக் கம்பியைக் கொண்டு குற்றவாளி தாக்கியதில் அவரது இடது தொடையில் காயம் ஏற்பட்டது. அவரது தன்னலம் கருதாத, கடமையுணர்ச்சி மிகுந்த வீரதீர செயலை பாராட்டி அவருக்கு காவல் துறைக்கான தமிழக முதலமைச்சரின் வீர தீரச் செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பரிசு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 5

0

0