சென்னையில் இருந்து மேலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
24 September 2020, 6:02 pmசென்னையில் இருந்து மேலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட தளர்வில் பொது போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவே தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை- திருவனந்தபுரம், சென்னை – மசூரு, சென்னை- மங்களூரு இடையே இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. செப்.,27 ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.