“நாட்டின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது தமிழகம்” – முதல்வர் பழனிசாமி பெருமிதம்..!

24 August 2020, 5:56 pm
Quick Share

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.

2021-22ம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்த முதலமைச்சர், மருத்துவ துறையில் நாட்டிலேயே சிறந்த கட்டமைப்பு வசதிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்க ரூ.190 கோடியில் கருவிகள் வாங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது எனவும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரும் சூழலில், மருத்துவம் படிக்கும் மாணவர்களின் கனவை அரசு நிறைவேற்றி வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது, என்று கூறினார். இதனை தொடர்ந்து, மதுரை மாவட்டம் பசுமலை, தமிழ்நாடு அரசு இசை கல்லூரியில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை மண்டலக் கலை பண்பாட்டு மையக் கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

Views: - 33

0

0