சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ.பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு.!!!

10 August 2020, 9:21 am
Quick Share

தூத்துக்குடி: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரும் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். போலீஸாரால் மிக கொடூரமாக சித்ரவதை செய்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வரும்நிலையில், வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, மேற்கண்ட 10 பேரில் 5 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, டெல்லியில் இருந்து வந்த 8 சிபிஐ அதிகாரிகளில் 6 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது, மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் பால்துறைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரிடம் விசாரணையானது நிறுத்தி வைக்கப்பட்டது. சிறப்பு எஸ்.ஐ. பால்துரை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஜூலை 7ல் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை தொடர்ந்து, கடந்த மாதம் 24-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காவலர் பால்துரை கடந்த சில நாட்களுக்கு முன், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

எஸ்.எஸ்.ஐ பால்துரை (வட்டமிடப்பட்டவர்)

இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், எஸ்.எஸ்.ஐ.பால்துரை (56) நேற்று நள்ளிரவில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக உள்ள இவர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளது மேலும், வழக்கு தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.