பேருந்தில் இருந்து மூதாட்டியை இறக்கி விட்ட விவகாரம்:நடத்துநரின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்…!!

Author: Udhayakumar Raman
7 December 2021, 11:32 pm
Quick Share

சென்னை:கன்னியாகுமரியில் மூதாட்டி ஒருவரை பேருந்திலிருந்து நடந்துநர் இறக்கி விட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வமேரி மீன் விற்று பிழைக்கும் மூதாட்டி. வழக்கம்போல குளச்சல் பேருந்துநிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியபோது, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அவரை பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார். மீண்டும் நடந்து செல்ல வேண்டிய துயரத்தில் அந்த மூதாட்டி, பேருந்து நிலைய நிர்வாக அலுவலகம் முன் நியாயம் கேட்டு கதறி அழுதார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து குமரி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

குமரி அரசுப் போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவின் பேரில் நாகர்கோவில் இயக்குதல், மற்றும் ஆய்வு அதிகாரி பாதிக்கப்பட்ட பெண் செல்வத்தின் வீட்டில் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.அப்போது சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபோது, தனது மகன்களை போன்று அவர்கள், பாதிக்கும்படியாக எதுவும் செய்துவிடாதீர்கள் எனக் கூறியுள்ளார். ஆனாலும் இந்நிகழ்வு தமிழக போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகள் வரை சென்றதால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர், நேரகாப்பாளர் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து குமரி அரசுப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச் சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 285

0

0