சமூக நீதி கண்காணிப்பு குழுவில் சமூக நீதியை மறந்த ஸ்டாலின் : ஆரம்பமே இப்படியா? நெட்டிசன்கள் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 6:31 pm
Stalin -Updatenews360
Quick Share

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை முறையாகக் கடைபிடிப்பதைக் கண்காணிக்க ‘சமூக நீதிக்‌ கண்காணிப்புக்‌ குழு’வை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் பெண்கள் இல்லாத பட்டியலா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச்‌ செயல்படுத்தப்படுகிறதா என்பதைக்‌ கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால்‌ “சமூகநீதிக்‌ கண்காணிப்புக்‌ குழு’” அமைக்கப்படும்‌ எனவும்‌, இக்கண்காணிப்புக்‌ குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள்‌, பதவி உயர்வுகள்‌, நியமனங்கள்‌ ஆகியவற்றில்‌ சமூகநீதி அளவுகோல்‌, முறையாக முழுமையாகப்‌ பின்பற்றப்படுகின்றனவா என்பதைக்‌ கண்காணிக்கும்‌, வழிகாட்டும்‌, செயல்படுத்தும்‌ பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால்‌, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப்‌ பரிந்துரை செய்யும்‌ எனவும்‌, இக்குழுவில்‌ அரசு அலுவலர்கள்‌, கல்வியாளர்கள்‌, சட்ட வல்லுநர்கள்‌ இடம்‌ பெறுவார்கள்‌ எனவும்‌ சமூகநீதி அரசாணையின்‌ நூற்றாண்டு நாளினையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள்‌.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும்‌ விதமாக, கீழ்க்காணும்‌ தலைவர்‌ மற்றும்‌ உறுப்பினர்களை நியமனம்‌ செய்து, “சமூகநீதிக்‌ கண்காணிப்புக்‌ குழுவினை்‌’ அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ உத்தாவிட்டுள்ளார்‌.

பேராசிரியர்‌ திரு. சுப. வீரபாண்டியன்‌ – தலைவர்‌
முனைவர்‌ கே. தனவேல்‌, இ.ஆ.ப., (ஓய்வு) – உறுப்பினர்‌
பேராசிரியர்‌ முனைவர்‌ சுவாமிநாதன்‌ தேவதாஸ்‌ – உறுப்பினர்‌
கவிஞர்‌ திரு. மனுஷ்யபுத்திரன்‌ – உறுப்பினர்‌
திரு. ஏ.ஜெய்சன்‌ – உறுப்பினர்‌
பேராசிரியர்‌ முனைவர்‌ ஆர்‌. இராஜேந்திரன்‌ – உறுப்பினர்‌
திரு. கோ. கருணாநிதி – உறுப்பினர்‌
சமூகநீதி கண்காணிப்புக்‌ குழுவானது, சமூகநீதி அளவுகோல்‌, முறையாக முழுமையாகப்‌ பின்பற்றப்படுகின்றனவா என்பதைக்‌ கண்காணித்து, அவை முழுமையாக பின்பற்றப்படாவிட்டால்‌, உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும்‌. இக்குழுவில்‌ சமூகச்‌ சீர்திருத்தத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ அவர்கள்‌ உறுப்பினர்‌- செயலராக அங்கம்‌ வகிப்பார்‌.

இந்த குழுவில் பெண்களே இல்லாத குழுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக நீதி என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு பெண்களே இல்லாமல் ஒரு குழுவை அமைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது என்ற விமர்சனம் செய்து வருகின்றனர்.

அனைத்து துறையில் சமூக நீதி இருக்க வேண்டும் என எண்ணும் அரசு, சமூக நீதி கண்காணிப்பு குழுவில் ஒரு பெண்ணை கூட நியமிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அனைவரும் சமம், அனைவருக்கும் உரிமை என்ற வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் குழு அமைப்பதிலேயே பாகுபாடா என்ற விமர்சனத்தையும் நெட்டிசன்கள் வைத்துள்ளனர்.

Views: - 385

0

0