ஸ்டாலினுக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது: பாஜக மாநிலத் தலைவர் முருகன் பேட்டி

22 September 2020, 8:56 pm
Quick Share

கன்னியாகுமரி: வேளாண்மை மசோதாவுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் கட்சிகளின் போராட்டங்கள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், ஸ்டாலினுக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது எனவும் பாஜக மாநிலத் தலைவர் முருகன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட கிளை மற்றும் அணி பொறுப்பாளர்கள் கூடடம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை பாஜக மாநிலத் தலைவர் முருகன் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தந்தை பெரியார் மட்டுமல்ல யார் நல்ல கருத்துக்களை கூறி இருந்தாலும் அதை பாஜக எடுத்துக்கொள்ளும் எனவும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி இங்கிருந்து வெற்றி பெறும் உறுப்பினருக்கு நிச்சயமாக பாரதப்பிரதமர் நல்ல பரிசளிப்பார் எனவும் தெரிவித்தார். மேலும், பெரியார் தொடர்பாக தனது பேச்சால் கட்சிக்குள் எந்தவித சலசலப்பும் இல்லை என்ற அவர், தற்போது தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தொடர்கிறது என்றார்.

வேளாண்மை மசோதாவுக்கு எதிரான திமுகவின் 28ம் தேதி நடைபெற உள்ள போராட்டம் மற்றும் 24ம் தேதி நடைபெறும் காங்கிரஸின் போராட்டத்தால் தமிழகத்தில் எந்தவித தாக்கமும் இருக்காது எனவும், ஸ்டாலினுக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது எனவும், தன்னைப் போன்ற விவசாயிகளுக்கு தான் தெரயும் எனவும் கூறினார். மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அதை குறை கூறுவது தான் ஸ்டாலினுடைய நோக்கம் எனவும், இவர்களைத் தவிர மக்களும் விவசாயிகளும் தெளிவாக உள்ளனர் எனவும் தெரிவித்தோடு தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசால் அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்தத் தொகையை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னை கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என கூறியதன் பொருள் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் சட்டமன்றத்திற்கு செல்வார்கள் என்பதை குறிக்கும், அந்த பொருளில் தான் கூறியதாகவும் தெரிவித்தார். வேளாண்மை மசோதாவுக்கு எதிராக வட இந்தியாவில் போராடும் விவசாயிகளை போல் தமிழக விவசாயிகள் போராட மாட்டார்கள் எனவும் அவர்கள் அவ்வாறான போராட்டத்தால் ஏமாற மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

Views: - 4

0

0