திமுக கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா? : காங்கிரசுடன் வெளியேறத் தயாராகும் விசிக..!!

27 January 2021, 5:55 pm
coverr stalin
Quick Share

தமிழகத்தில் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் களம் இங்கும் அங்கும் அசையும் கடிகார பெண்டுலம் போல் ஆடிக் கொண்டே இருக்கிறது. எந்த நேரம், என்ன நடக்குமோ? என்ற பரபரப்பு அரசியல் ஆர்வலர்களின் பல்ஸை எகிறவும் வைக்கிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு சிக்கலான நிபந்தனையை முன் வைத்தது. அதாவது வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 20சதவீத இட ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் கூட்டணியில் நீடிக்க மாட்டோம் எனவும் தடாலடியாக அறிவித்தது.

Stalin Madurai - Updatenews360

நடைமுறைக்கு சாத்தியமில்லாத இந்த நிபந்தனையை ஏற்க அதிமுக அரசு பெரிதும் தயக்கம் காட்டி வருகிறது. வன்னியர்களுக்கு இதுபோல் இட ஒதுக்கீடு செய்தால் தமிழகத்திலுள்ள 500-க்கும் மேற்பட்ட சாதியினரும் அவரவர் பிரிவில் தங்களுக்கும் இதுபோல் உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்துவார்கள். தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கவிருக்கும் இந்த நேரத்தில் இப்பிரச்சனை ஆளும் அதிமுக அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில்தான் அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து பாமகவின் அவசர நிர்வாக குழு கூட்டம் 25ம் தேதி கூடி முடிவெடுக்கும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருந்தார். ஆனால் திட்டமிட்டபடி இந்த நிர்வாக குழு கூட்டம் நடைபெறவில்லை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு இருவேறு காரணங்கள் கூறப்படுகிறது.

dmk - pmk - updatenews360

முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த நிர்வாக குழு கூட்டத்தை ராமதாஸ் ஒத்தி வைத்திருக்கிறார் என்று என்கிறார்கள். இன்னொரு பக்கம் திமுக கூட்டணியில் சேர்வதற்கு அவர் முடிவு செய்துவிட்டார். அதனால்தான் இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்று காரணம் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக திடீரென்று எப்படி திமுகவுக்கு தாவும் என்ற கேள்வி எழலாம். இதற்கும் ஒரு பதில் இருக்கிறது.

கடந்த 21ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டில் போடும் விதமாக ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். “நமது கூட்டணியில் சேர்வதற்கு சில கட்சிகள் தயாராக இருக்கின்றன. நான்தான் அதை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறேன்” என்று பொடி வைத்துப் பேசினார். அந்தக் கட்சி எதுவாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

ஆம். பாமகதான் என்பது சொல்லாமலே தெரியும். ஏனென்றால் சிறு கட்சிகளை இணைப்பதற்காக ஸ்டாலின் இப்படி பேசியிருக்க மாட்டார் என்பது நிச்சயம். இதற்கிடையே இன்னொரு சூசகமான தகவலும் வெளியாகி இருந்தது. அதாவது திமுக கூட்டணியில் சேர்வதற்காக பாமகவின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாக ஒரு தகவல் கசிந்தது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் டாக்டர் ராமதாஸின் விருப்பம் வேறாக இருந்தது. திமுக அணியில் சேர்ந்தால் தேர்தலுக்குப்பின் பாமகவை காணாமல் போக வைத்துவிடுவார்கள். திமுக அணியில் அதிக வெற்றி கிடைத்தாலும் கூட அது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று அவர் தயக்கம் காட்டினார். இப்படி தந்தையும் மகனும் பாமகவை வெவ்வேறு திசைகளில் இழுக்க ஆரம்பித்தனர்.
இது அக்கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
யார் சொல்வதைக் கேட்பது? யார் சொல்வது கட்சிக்கு நல்லது? என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டார்கள்.

இதற்கு ஒரு முடிவு கட்டத்தான் நேற்று அவசர குழு கூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டது.
ஆனால் இந்த கூட்டம் வருகிற 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் திமுகவில் சேரும் எண்ணத்திலிருந்து பாமக பின்வாங்கி இருக்கிறது என்று ஒரு தரப்பினரும், இல்லையில்லை திமுக கூட்டணியில் சேர்வது ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று மற்றொரு தரப்பினரும் கூற ஆரம்பித்து விட்டனர். மேலும், இது ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகவே மாறி விட்டது.

ஆனால் திமுக அணியில் பாமக சேருவதை பாஜகவின் டெல்லி மேலிடம் விரும்பவில்லை. அதிமுக கூட்டணியில் பாமக இருந்தால்தான் திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க முடியும் என்று பாஜக நம்புகிறது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து என்னதான் தீவிரம் காட்டினாலும் வெற்றிக் கோட்டை திமுக எட்டிப் பிடித்துவிடும் என்று பாஜக கருதுகிறது. அதனால் பாமக என்கிற குதிரை திமுகவின் லாயத்துக்குள் புகுந்து விடாமல் இருக்க லகானை இழுத்துப் பிடித்திருக்கிறது, பாஜக.

அதற்கும் கூட ஒரு கேரட்டை காட்டித்தான் லகானை பாஜக இழுத்துப் பிடித்து இருக்கிறது என்கிறார்கள். அதாவது மத்திய அமைச்சரவையில் தற்போது 7 காலியிடங்கள் உள்ளன. விரைவில் அமைச்சரவை விஸ்தரிக்கப்படும்போது அதில் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு நிச்சயம் ஒரு பதவி உண்டு என்று பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் அன்புமணி ராமதாஸ் தடுமாற்றம் அடைந்திருப்பதாகவும், இதைத்தொடர்ந்தே பாமகவின் அவசர நிர்வாக குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சரி ஒருவேளை, இதையும் மீறி திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? பாமக இருக்குமிடத்தில் விசிக இருக்காது என்றும் விசிக இருக்குமிடத்தில் பாமகவுக்கு வேலை இல்லை என்றும் கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள அடிப்படை பிரச்சனைகள்தான்.
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வட மாவட்டங்களில் பட்டியல் இன சமூகத்தினரும் பெரும் அளவில் வசிக்கிறார்கள். இவர்கள் திருமாவளவனை ஒருமித்த கருத்துடன் தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு தரப்பினருமே எதிரும் புதிருமாக மோதிக்கொள்வது அடிக்கடி நடக்கிறது. இந்த கசப்புணர்வு இரு அணிகளையும் ஒரே பக்கத்தில் நிற்கவிடாது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தனிச் சின்னம், இரட்டை இலக்க தொகுதிகள் ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் முரண்டு பிடிக்கும் விசிக, பாமக தங்கள் அணி பக்கம் வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விடும் அல்லது வெளியேற்றப்பட்டு விடும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அக்கட்சி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கை கோர்க்கலாம். விசிக தலைவர் திருமாவளவனின் நட்புக் கட்சி என்கிற வகையில் வைகோவின் மதிமுகவும் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இதைவிட இன்னொரு சிக்கலும் திமுகவுக்கு இருக்கிறது. பாமகவுக்கு திமுக அணியில் எப்படியும் குறைந்தபட்சம் 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம். அதேபோல் திமுகவுடன் நீண்டகாலமாக கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சியான காங்கிரசுக்கும் இதே அளவு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு ஏற்படும். இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இஸ்லாமியர் கட்சிகள் மற்றும் உதிரி கட்சிகளுக்கு14 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் திமுகவுக்கு ஏற்படும்.

இந்த கணக்கின் படி பார்த்தால் திமுகவால் 170 இடங்களில் மட்டுமே போட்டியிட இயலும். ஒருவேளை பாமக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 20 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு சிறு சிறு கட்சிகளுக்கு 14 தொகுதிகள் தரப்பட்டால் அப்போது திமுகவால் 180 இடங்களில் போட்டியிட முடியும். எப்படிப் பார்த்தாலும் 200 தொகுதிகளில் திமுக மட்டுமே போட்டியிட வேண்டும் என்கிற பிரசாந்த் கிஷோரின் கணக்கு இங்கே பொய்த்துப் போய் விடுகிறது.

இதனால் காங்கிரஸை கழற்றி விடும் முடிவுக்கு திமுக வரலாம். அப்போதுதான் திமுக நினைப்பதுபோல் 200 தொகுதிகளில் களம் காண முடியும். காங்கிரசை வெளியேற்றிவிட்டு பாமகவுக்கு 20 சீட்டுகளை ஒதுக்கி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை மட்டும் அவற்றின் சொந்த சின்னத்தில்10 தொகுதிகளில் போட்டியிட அனுமதித்தால் திமுகவால், அதாவது உதயசூரியன் சின்னத்தில் 204 தொகுதிகளில் கூட போட்டியிட முடியும்.

திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின்படி இந்தக் கணக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருக்கிறது. அதாவது, கூட்டணியில் காங்கிரஸ் இல்லாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினும் இதைத்தான் விரும்புகிறார் போலும். எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் காங்கிரஸ் இல்லாமல் இருந்தால்தான் திமுகவால் 200 தொகுதிகளில் போட்டியிட முடியும். இதனால்தான் காங்கிரஸ் வெளியேறட்டும் என திமுக காத்திருக்கிறது என்கிறார்கள்.

காங்கிரஸ் கழற்றி விடப்பட்டால் அதுவும் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் பக்கம்தான் போய் சேரும்.
அப்போது கமல் தலைமையிலான மூன்றாவது அணி வலுவடைந்து அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு கடும் சவால் விடுவதாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு. அதேநேரம் 200 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்று கூறிக்கொண்டே வலுவான கூட்டணி அமையும்போது திமுக 170 அல்லது180 தொகுதிகளில் போட்டியிட்டால் போதும் என்று பிரசாந்த் கிஷோர் கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது 200 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்று அவர் கூறுவதெல்லாம் அதிமுக கூட்டணியை ஏமாற்றுவதற்கான திசை திருப்பும் தந்திரம்தான் என்ற பேச்சும் அடிபடுகிறது. கூட்டணி அமையும்போது இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிடும்.

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 0

0

0