குழந்தைகளுக்காக வாங்கிய வெங்காய போண்டா: உள்ளே இருந்த பிளேடால் அதிர்ச்சி…!!
28 November 2020, 9:50 amநிலக்கோட்டையில் குழந்தைகளுக்காக காவல் உதவி ஆய்வாளர் வாங்கிய வெங்காய போண்டாவுக்குள் பிளேடு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கனகராஜ். இவர் தனது மகன், 2 பேத்திகளுடன் விளாம்பட்டி போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். கனகராஜ் தனது பேத்திகளுக்காக, நிலக்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு கடையில் போண்டா வாங்கியுள்ளார். பின்னர் அவற்றை வீட்டிற்கு எடுத்து சென்று, தனது பேத்திகளுக்கு கொடுத்துள்ளார்.
அப்போது, அவரது பேத்தி சாப்பிட்ட போண்டா ஒன்றில் முழு பிளேடு இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தனது மற்றொரு பேத்தியிடம் இருந்த போண்டாவையும், மற்ற போண்டாக்களையும் பிரித்து பார்த்தார். ஆனால் மற்ற போண்டாக்களில் அதுபோன்று எதுவும் இல்லை. ஒரு போண்டாவில் மட்டும் பிளேடு இருந்தது.
இதுகுறித்து நிலக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேசுக்கு, கனகராஜ் தகவல் தெரிவித்தார். இதனைதொடர்ந்து அந்த கடைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்ட தொழிலாளியை உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்தனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் நிலையத்தில் குழந்தைக்கு வாங்கிய ‘சாக்லேட்’டில் பீடி துண்டு இருந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியது. தற்போது நிலக்கோட்டையில் போண்டாவில் ‘பிளேடு’ இருந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0