“தமிழக அரசு சரியான நிலைபாடுடன் செயல்படுகிறது” – வைகோ..!

18 August 2020, 11:40 am
Quick Share

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் போராட்டத்திற்கும், 13 உயிர்கள் பலியானபோது அவர்கள் சிந்திய ரத்தத்திற்கும் கிடைத்த வெற்றி என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு, 13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் வேதாந்தா குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதற்கு, சுற்று சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு சரியான நிலைபாடுடன் உள்ளது என குறிப்பிட்டார். மேலும், உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள இந்த நாள் மகிழ்ச்சிக்கு உரிய திருநாள் என நெகிழ்ந்துள்ளார்.

தொடர்ந்து பேசிய வைகோ ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடியுள்ள தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது, கடந்த 26 ஆண்டுகள் நடைபெற்ற போராட்டத்திற்கும், 13 உயிர்கள் பலியானபோது அவர்கள் சிந்திய ரத்தத்திற்கும் கிடைத்த வெற்றி என பெருமிதம் கொண்டுள்ளார்.

Views: - 29

0

0