அரசு காப்பீடு அட்டையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை : அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை!!

13 May 2021, 3:41 pm
Minister Saminathan - Updatenews360
Quick Share

திருப்பூர் : தனியார் மருத்துவமனைகளில் உரிய ஆவணங்களுடன் அரசு காப்பீடு திட்ட அட்டை வைக்கப்பட்டிருந்து ஏற்றுக் கொள்ளவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும் என கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயதித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , நாடாளுமன்ற உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் , மேலும் முழுமையாக கட்டுப்படுத்த முழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , கொரோனா தடுப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க நாளைய தினம் முதல் நிறுவனங்களை அடைப்பதாக உறுதி அளித்தது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.

பத்திரிக்கையாளர்கள் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்து வரக்கூடிய சூழ் நிலையில் அவர்களுக்கான நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

மேலும் திருப்பூரில் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அதேபோல் உரிய ஆவணங்களுடன் அரசு காப்பீட்டு அட்டை வைத்திருந்து அதை ஏற்றுக்கொள்ளாத நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Views: - 65

0

0